புற்றுநோயாளிகளுக்கான 1.6 இலட்சம் உயிர்காக்கும் தடுப்பூசிகள் கிடங்கில் முடக்கம் – அவசர தீர்வு கோரிக்கை
NMRA மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடு காரணமாக, புற்றுநோயாளிகளுக்குத் தேவையான 160,000 அத்தியாவசிய தடுப்பூசிகள் மருத்துவக் கிடங்குகளில் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அடுத்த 3 மாதங்களில் சுமார் 75,000 நோயாளிகள் உயிராபத்தை எதிர்கொள்ளக்கூடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடு காரணமாக, புற்றுநோயாளிகளுக்கு அத்தியாவசியமான 160,000 உயிர்காக்கும் தடுப்பூசிகள் மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் கிடங்குகளில் முடங்கியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பெட்டியில் தேவையான தகவல்கள் மற்றும் சிரிஞ்சின் முன்பகுதியில் லேபிள், உற்பத்தித் திகதி, காலாவதித் திகதி உள்ளிட்ட விவரங்கள் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், சிரிஞ்சின் பின்புற லேபிள் தொடர்பான நிர்வாகச் சிக்கல் காரணமாக அவற்றை MSD பொறுப்பேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ரூ.900 பெறுமதியான இந்தத் தடுப்பூசி கறுப்புச் சந்தையில் ரூ.25,000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கீமோதெரபி சிகிச்சை பெறும் சுமார் 25,000 நோயாளிகளுக்கு மாதந்தோறும் இந்தத் தடுப்பூசி அவசியமாகும்.
தடுப்பூசிகளை மீண்டும் லேபிள் செய்வதற்காக திருப்பி அனுப்பினால், புதிய தொகுதி இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 3 மாதங்கள் ஆகலாம். இதனால் சுமார் 75,000 புற்றுநோயாளிகள் உயிராபத்தை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார அமைச்சர் உடனடியாக தலையிட்டு, சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் அவசரக் கலந்துரையாடல் நடத்தி, தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.