பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ. வரை மழை, பல பகுதிகளில் பலத்த காற்று!
இன்று (31) சப்ரகமுவ, வடமேல் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழையும், பல பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இன்று (31) சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.