நேபாள வெள்ளத்தில் 100 பேர் சுரங்கத்திற்குள் சிக்கல் – உயிரிழப்பு 469 ஆக அதிகரிப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளத்தால் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சுமார் 100 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நீரில் மூழ்கியுள்ள திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சுமார் 100 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இதேவேளை, திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகளும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.