பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பாலையடிவட்டை பகுதியில், நிலத்தில் கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அந்தப் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.


சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த பழத்தை சிறுவன் எடுத்து உண்டுள்ளார். சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலத்தில் கிடந்த நாவற்பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதுகுறித்து பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு