11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வவுனியாவில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 36 வயது நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தந்தையின் பராமரிப்பில் இருந்த 11 வயது சிறுமியை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 36 வயது நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு வவுனியா பொலிஸாரால் நீதிவான் நீதிமன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகையும் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அரச தரப்பு சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.