பாகிஸ்தான் வைத்தியசாலையில் பயங்கர தீ விபத்து – 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு அறையில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வைத்தியசாலையின் மகளிர் மருத்துவப் பிரிவில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு அறையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற போது குறித்த அறையில் 16 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அறையில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டதையடுத்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அறை முழுவதும் புகை சூழ்ந்ததுடன், தீ வேகமாக பரவியதால் குழந்தைகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.