நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில்: மேலும் 2 சிறைக்காவலர்கள் உயிரிழப்பு – பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில்: மேலும் 2 சிறைக்காவலர்கள் உயிரிழப்பு – பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் இரு குழுக்களுக்கிடையில் கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறை மோதலின் விளைவாக காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 25 மற்றும் 39 வயதுடைய மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 500 பேரிடம் விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளிடமும் அடுத்த கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து விசேட குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மோதல் நிகழ்ந்த சமயத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பெரும்பாலானோர் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 600 கைதிகள் மட்டுமே அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் கட்டங்களாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய பாதுகாப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் காரணமாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்திப்பதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படமாட்டாது என குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில்: மேலும் 2 சிறைக்காவலர்கள் உயிரிழப்பு – பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை