வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு!
மட்டக்களப்பு, கற்சேனை பகுதியில் நீர் நிரப்பப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்த 2 வயது 8 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை, முல்லை வீதியில் நேற்று (01) காலை சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது 8 மாத குழந்தை, எதிர்பாராதவிதமாக தலைகீழாக வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், உறவினர்கள் உடனடியாக மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், குழந்தை ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்படி திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.