யோஷித ராஜபக்ஷ பணச்சலவை வழக்கு: விசாரணை ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என அவரது தரப்பு தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித உடல்நலக் குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.
இதனை பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணையை 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். மேலும், சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் அடுத்த தவணையிலும் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.