2025 உயர்தர மாணவர்களின் பல்கலைக்கழக சேர்க்கைக்கு மேலும் 1–2 ஆண்டுகள் தாமதம்?
பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நெரிசல் காரணமாக, 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நெரிசல் மற்றும் வளப்பற்றாக்குறை காரணமாக, 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்மேளனம், தற்போது 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு குழுக்கள் சேர்க்கைக்காகக் காத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர் கல்வி அமைச்சும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களை செப்டம்பர் மாதத்திற்குள் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள போதிலும், பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மாணவர்களால் நிரம்பியுள்ளதாக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதி வசதிகளின் பற்றாக்குறை, விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் சில பீடங்களில் அதிகளவான மாணவர் குழுக்கள் கல்வி கற்பது போன்ற காரணங்களால் கற்பித்தல் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் தொடர்பான அரசாங்கத் திட்டம் முன்வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கோ பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கோ போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களும் சேர்க்கைக்கு வரும்பட்சத்தில், மூன்று உயர்தரப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விரிவுரையாளர்கள் எச்சரித்துள்ளனர்.