2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – 3.72 இலட்சம் பேர் தோற்றுகின்றனர்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடு முழுவதும் ஆரம்பமாகிறது. 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சையில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். பரீட்சை நிலையங்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் வருகை தருமாறும், கைத்தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – 3.72 இலட்சம் பேர் தோற்றுகின்றனர்

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சைக்கு மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களில் 264,496 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் ஆவர்.

பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பரீட்சை அறைக்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதிச் சீட்டு மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றை அடையாளத்தை உறுதிப்படுத்த பயன்படுத்த முடியும். தேசிய அடையாள அட்டை இல்லாத சந்தர்ப்பங்களில், உரிய அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட புகைப்படங்களையும் தற்காலிக அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள், குறிப்புகள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை அறைக்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பரீட்சை விதிமுறைகளை மீறி மோசடிகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படலாம் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே, அனைத்து பரீட்சார்த்திகளும் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பரீட்சையை எதிர்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்பாராத அவசர அல்லது அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், பரீட்சார்த்திகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – 3.72 இலட்சம் பேர் தோற்றுகின்றனர்