2027 ஜனவரி வரை 15 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவு உதவி தேவைப்படலாம் – FEWS NET எச்சரிக்கை

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் 10 முதல் 15 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படலாம் என FEWS NET எச்சரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, குறைந்த வருமானம் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவுகள் காரணமாக உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் மோசமடையக்கூடும் என அறிக்கை தெரிவிக்கிறது.

2027 ஜனவரி வரை 15 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவு உதவி தேவைப்படலாம் – FEWS NET எச்சரிக்கை

அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் FEWS NET (Famine Early Warning Systems Network) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையான மக்களுக்கு மனிதாபிமான உணவு உதவி தேவைப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில், குறிப்பாக 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை மேலும் சவாலானதாக மாறும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வேலைவாய்ப்பில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உணவுப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் வருமானம் அதே அளவில் உயராததால், பல குடும்பங்கள் உணவின் அளவையும், தினசரி உணவு வேளைகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, ஈர வலய பெருந்தோட்ட தொழிலாளர்கள், மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள், நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் அதிக ஆபத்தில் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், விவசாய உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், செப்டம்பர் மாதம் வரை உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கக்கூடும் எனவும், தற்போதைய நிலையில் பெரிய அளவிலான அவசர மனிதாபிமான உணவு உதவித் திட்டங்கள் இல்லாததால், எதிர்வரும் மாதங்களில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என FEWS NET எச்சரித்துள்ளது.

2027 ஜனவரி வரை 15 இலட்சம் இலங்கையர்களுக்கு உணவு உதவி தேவைப்படலாம் – FEWS NET எச்சரிக்கை