உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை செப்டம்பர் 8ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்க கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்சங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் தரப்பின் வாய்மொழி சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததையடுத்து, இரு தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை செப்டம்பர் 8ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், வெடிபொருட்கள், வாள்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட 2,076 சான்றுப்பொருட்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள், மரபணு அறிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.