துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் களவு: வீட்டில் தங்கியிருந்த யுவதி கைது
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீடொன்றிலிருந்து 24½ பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில், களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி, களவாடப்பட்ட நகைகளுடன் யுவதி ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் கல்விக்காக வெளிமாவட்டத்திலிருந்து வந்து அந்த வீட்டில் தங்கியிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) வீடொன்றில் இடம்பெற்ற தங்க நகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வீட்டிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி உள்ளிட்ட மொத்தம் 24½ பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக புலனாய்வு மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், திங்கட்கிழமை (03.08.2026) களவாடப்பட்ட தங்க நகைகளை மீட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதி வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், கல்வி கற்பதற்காக துறைநீலாவணை பகுதியில் உள்ள குறித்த வீட்டில் தங்கி வந்தவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.