தண்ணீர் என நினைத்து இரசாயனம் குடித்த 3 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!
கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த வவுனியாவைச் சேர்ந்த 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் பெரோக்சைட் இரசாயனத்தை குடித்ததில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி தினேஸ்காரம் ஹயனிகா, கம்பளை புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் பெரோக்சைட் இரசாயனத்தை குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில், தாகம் ஏற்பட்ட சிறுமி வீட்டின் சன்னல்படியில் போத்தலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் வாயிலிருந்து நுரை வெளியேறியதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மரண விசாரணை நேற்று (24) கம்பளை வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், சிறுமியின் தந்தை சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.