அறுகம்பையில் ரூ.4.2 இலட்சம் மதுபானத்துடன் ஒருவர் கைது
அறுகம்பை சுற்றுலா வலயத்தில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 408 பியர் கேன்கள் மற்றும் 36 மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அறுகம்பை சுற்றுலா வலயத்தில் அனுமதியின்றி பெருந்தொகையான மதுபானங்களை கொண்டு சென்ற நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (10) இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 408 பியர் கேன்கள் மற்றும் பல்வேறு வகையான 36 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மதுபானங்களின் மொத்த பெறுமதி சுமார் ரூ.4 இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அறுகம்பை சுற்றுலா வலயத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், சில சிறிய விடுதி நடத்துநர்கள் சட்டவிரோதமாக மதுபானங்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.