எல் நினோ தாக்கம்: 4.9 கோடி பேருக்கு பட்டினி அபாயம்
எல் நினோ காலநிலை நிகழ்வின் தாக்கத்தால் உலகளவில் மேலும் 4.9 கோடி பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
எல் நினோ காலநிலை நிகழ்வின் தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
45 உணவுப் பாதுகாப்பற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தற்போது 22.5 கோடியாக உள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 27.4 கோடியாக அதிகரிக்கக்கூடும். இதன் மூலம் மேலும் 4.9 கோடி பேர் கடுமையான பட்டினி நிலைக்கு தள்ளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 2°C வரை அதிகரிக்கும் எல் நினோ நிகழ்வு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் உச்சத்தை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டின் விவசாய உற்பத்திச் சுழற்சியிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக மத்திய அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் முறையற்ற பருவமழை காரணமாக 1.8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.