புழுக்களுடன், பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்டுகள் பறிமுதல் – உற்பத்தியாளருக்கு ரூ.46,000 அபராதம்
களுவாஞ்சிகுடி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட புழுக்கள் மற்றும் பூஞ்சணம் காணப்பட்ட பிஸ்கட்டுகள் பொது சுகாதார பரிசோதகரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தியாளருக்கு ரூ.46,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட்டுகளில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனன் தலைமையில் குறித்த பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பிஸ்கட்டுகளை உற்பத்தி செய்தவர், விநியோகம் செய்தவர் மற்றும் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததுடன் 46,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், குறித்த தொகுதி இலக்கத்தைக் கொண்ட அனைத்து பிஸ்கட் பைக்கற்றுக்களையும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அனைத்து கடைகளிலிருந்தும் உடனடியாக மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.