நீர்த்தேக்கங்களில் 48% மட்டுமே நீர் – சிக்கனமான பயன்பாட்டுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 80 நீர்த்தேக்கங்களில் தற்போது 48% மட்டுமே நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடிநீர் மற்றும் சிறுபோக விவசாயத்திற்கான நீர் தற்போது போதுமானதாக உள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தில் உள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்மட்டம் தற்போது 48 % இருப்பதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும், நீர் முகாமைத்துவப் பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் நீரை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, சிறுபோக விவசாயப் பருவம் நிறைவடைந்துள்ளதால், தற்போது கையிருப்பில் உள்ள நீர் அந்தத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நீர்த்தேக்கங்களை சார்ந்து குடிநீர் பெற்றுவரும் மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.