கேகாலை தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5.2 இலட்சம் அபராதம்
காலாவதியான மருத்துவப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கு கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு ரூ.520,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு காலாவதியான மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்தமை, காலாவதியான ஊசிகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கு ரூ.520,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கடந்த ஜூலை 24ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில், FBC இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.400 கட்டுப்பாட்டு விலைக்குப் பதிலாக ரூ.500 வசூலித்தமை, காலாவதியான HCV Rapid Test Cassettes மற்றும் இரசாயனப் பொருட்கள் வைத்திருந்தமை, மேலும் காலாவதியான 23 UNOLOK Single-use HYPERMIC Needles விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வைத்தியசாலை நிறுவனம் 3 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதவான் ரூ.520,000 அபராதம் விதித்தார்.
இவ்வாறான காலாவதியான மருத்துவப் பொருட்கள் அல்லது அதிக கட்டண வசூல் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்துக்கு அழைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.