ஈரான்–அமெரிக்கா மோதல் தீவிரம்: 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்க முயன்றதற்கு பதிலடியாக, ஈரானுடன் தொடர்புடைய ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகிலிருந்த மற்றொரு கப்பலும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
இதற்கு பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் 20 ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 18 ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறித்ததாக ஜோர்தான் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் கடந்த வாரத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கமாக ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதும் மேலதிக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவுறுத்தியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஐந்து எண்ணெய் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் மிகப்பெரிய நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. ஈரான் மீண்டும் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க முயன்றால், அதற்கான பதிலடியாக மேலும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலக்காகும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.