வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட ஒப்பந்தம்!
வெனிசுலாவின் 17 எண்ணெய் வயல்களில் உள்ள சுமார் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா–வெனிசுலா இடையே பிரம்மாண்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலாவின் எண்ணெய்த் துறைக்கு 100 பில்லியன் டொலர் முதலீடு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் சுமார் 65 பில்லியன் பீப்பாய்களை உள்ளடக்கிய 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவும் வெனிசுலாவும் பிரம்மாண்ட ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறைக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க முடியும் எனவும், காராகாஸ் நிர்வாகத்திற்கு 209 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு என்பது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எனக் குறிப்பிடப்படுகிறது. ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், வெனிசுலாவில் இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படாத மிகப்பெரிய எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.