ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: வணிக வளாகம் இடிந்து பலர் சிக்கினர்; உயிரிழப்பு அச்சம்
ஜப்பானின் கியூஷு தீவில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்தது. 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் நிலவுகிறது.
ஜப்பானின் கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் குமாமோட்டோ நகருக்கு தெற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. பல வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. பாதுகாப்பு காரணங்களால் சில போக்குவரத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த பேரிடரின் போது வணிக வளாகம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தால் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
மீட்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அடுத்த சில நாட்களில் பின்அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.