அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நடவடிக்கை – 72,000 புதிய நியமனங்கள்
அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். மேலும், அரச சேவையில் 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் முறையான தகுதிகளின் அடிப்படையில் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் அரச சேவையின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய நிர்வாகக் கட்டமைப்பான சிவில் சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச சேவைக்கு சுமார் 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை சேர்க்கைகள் ஆகியவை அரசியல் தலையீடுகளின்றி உரிய நடைமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அரச ஊழியர்கள் அவர்களின் திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், முறைகேடுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசாங்கம் தலையிடும் எனவும் தெரிவித்துள்ளார்.