அமெரிக்கா–ஈரான் பதற்றம்: உலக எண்ணெய் விலை உயர்வு இலங்கையையும் பாதிக்கும் அபாயம்!
அமெரிக்கா ஈரான் இராணுவ பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவும், உள்நாட்டு எரிபொருள் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. ஈரான் முக்கிய கடல்சார் போக்குவரத்து வழித்தடங்களை மூடினால், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 200 அமெரிக்க டாலர்கள் வரை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
லங்கா மெரின் சர்விசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மதுர ஹெட்டியாராச்சி, உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால், அது இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் கடுமையான ஏற்றத் தாழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 62% அதிகரிப்பாகும்.
செங்கடல் பகுதியில் ஹூதி தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஹோர்முஸ் போன்ற முக்கிய ஜலசந்திகளை மூடக்கூடிய சாத்தியக்கூறுகள் உலக எரிசக்தி விநியோகத்திற்கும், இலங்கை போன்ற இறக்குமதியை சார்ந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.