டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடு கடுமையான கடமை மீறலாகும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பாதுக்கை மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்க மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 14 முன்னணி காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு சட்ட அங்கீகாரம் இருப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்திலும், *1338# சேவையைப் பயன்படுத்தி காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாக உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை