நாட்டின் பல பகுதிகளில் மழை; சில கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, வடமேல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில மாகாணங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், அலை உயரம் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் பொதுவான வேகம் மணிக்கு 30–40 கிலோமீற்றராக இருக்கும்.
சிலாபம்,புத்தளம்,காங்கேசன்துறை மற்றும் காலி,ஹம்பாந்தோட்டை,பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், வாகர, திருகோணமலை, காங்கேசன்துறை கடற்பகுதிகளிலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலை உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் மற்றும் கடலோடிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.