பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இதன்படி, இன்று நண்பகல் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக்க மற்றும் மீகஹாகிவுல உள்ளிட்ட பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.