கொழும்பில் பட்டமளிப்பு விழாவுக்கு வந்த யுவதியை காரில் கடத்த முயற்சி – பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கொழும்பு BMICH-இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதியொருவரை காரில் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர். தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதியொருவரை காரில் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை நாரஹேன்பிட்டி பொலிஸார் முறியடித்துள்ளனர்.
நேற்று (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதியொருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்த முயற்சிக்கப்பட்டது. எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி தொடர்ந்து பயணித்ததால், நாரஹேன்பிட்டி–நாவல வீதியில் பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து சாரதி காரை கைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், காரை சோதனையிட்ட பொலிஸார் அதற்குள் யுவதியொருவர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணைகளில், குறித்த யுவதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீட பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தவர் என்பதும், காரை செலுத்தியவர் அவரது காதலன் என்பதும் தெரியவந்துள்ளது. யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்ததாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியது அவரது தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சந்தேகநபருடையது எனவும், அதனை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவிற்கு ஓட்டி வந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.