கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு – அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கடுமையான விமர்சனங்களால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேற, கூட்டம் எந்தத் தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்தது.

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு – அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான விமர்சனங்களால் பரபரப்பாக மாறியது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

விவசாயம் தொடர்பான கலந்துரையாடலின் போது, திருவையாறு பகுதியில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாயச் செய்கையில் முறைகேடுகள் இடம்பெற்றதாக எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தால் கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர். அதிகாரிகள் வெளியேறியதால் அபிவிருத்திக் குழுக் கூட்டம் எந்தத் தீர்மானங்களும் எடுக்கப்படாமல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு – அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்