இன்று ஆரம்பமாகும் செப்டெம்பர் பாராளுமன்ற அமர்வு! நாமல் ராஜபக்ஷவுக்கும் பங்கேற்க அனுமதி
செப்டெம்பர் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) ஆரம்பமாகிறது. செப்டெம்பர் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த அமர்வில், விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்று பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) ஆரம்பமாகிறது. பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது.
நாளை (09) பாதுகாப்புப் படைகளின் தலைமை பிரதானி (நீக்கம் செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதி பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 7 தனிநபர் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்ஷவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்