'எல் நினோ' தாக்கம் தீவிரம்: வெப்பம் அதிகரிப்பு, மழை குறைவு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

'எல் நினோ' காலநிலை தாக்கம் காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து மழைவீழ்ச்சி குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், நண்பகல் நேரங்களில் வெளிப்பணிகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'எல் நினோ' தாக்கம் தீவிரம்: வெப்பம் அதிகரிப்பு, மழை குறைவு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், 'எல் நினோ' காலநிலை தாக்கம் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைந்து, குறிப்பாக ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை உச்சநிலையை எட்டக்கூடும் என்றார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைவதுடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் வெப்பநிலை 30°C-ஐத் தாண்டியுள்ளதாகவும், அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இதனால் நண்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்தவெளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், போதியளவு தண்ணீர் அருந்தவும், நிழலான இடங்களில் தங்கியிருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதி மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மழை அதிகரித்து நீர்த்தேக்கங்கள் நிரம்பக்கூடும் என்றாலும், அடுத்த ஆண்டுக்கான தேவையை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக நிர்வகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



'எல் நினோ' தாக்கம் தீவிரம்: வெப்பம் அதிகரிப்பு, மழை குறைவு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை