இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களால் பதவி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுரன்ஜித் வேவிட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பதவி வகித்த புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களைக் காரணம் காட்டி நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்தார்.
புதிய தலைவர் சுரன்ஜித் வேவிட்ட, ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன், வங்கியியல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவராவார். மேலும், சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உள்ளிட்ட பல துறைகளிலும் அனுபவம் பெற்றுள்ளதுடன், 2013ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில்முனைவோராகவும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.