தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் பலி – ஐ.நா. கவனம்

தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐ.நா. வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே தெரிவித்துள்ளார்.

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் பலி – ஐ.நா. கவனம்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே கவனம் செலுத்தியுள்ளார். இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தனது X கணக்கில் பதிவிட்டுள்ள அவர், இவ்வாறான வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தாக்குதலை நடத்துவதற்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கரவண்டி ஒன்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் நேற்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், குறித்த கைக்குண்டுத் தாக்குதல் இலக்கு மாறி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்காகக் கொண்டே சந்தேக நபர்கள் வந்திருக்கலாம் எனவும், குறித்த வீடு மாற்றப்பட்டிருந்த காரணத்தால் தாக்குதல் தவறான வீட்டில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் சடலங்களும் நேற்று (12) பிற்பகல் அவர்களது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் பலி – ஐ.நா. கவனம்