மத்திய கிழக்கு போர்ப் பதற்றம்: வானில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் பாதுகாப்பாக கட்டுநாயக்க திரும்பின
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டதால், குவைத் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வானில் காத்திருந்து பின்னர் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திரும்பின.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திரும்பின.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று மாலை 5.10 மணிக்கு குவைத் நோக்கி UL-229 விமானமும், இரவு 6.36 மணிக்கு தம்மாம் நோக்கி UL-253 விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தன.
A-321neo வகையைச் சேர்ந்த இந்த விமானங்கள் மத்திய கிழக்கு வலயத்தை அண்மித்தபோது, ஈரானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியன. இதனால் விமானங்கள் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டது.
கட்டுநாயக்கவிற்கு நேரடியாகத் திரும்புவதற்கு போதிய எரிபொருள் இல்லாததால், விமானங்கள் அருகிலுள்ள பாதுகாப்பான வான்பரப்பில் சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டுப் பறந்தன. பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு விமானங்களும் எந்தவித பாதிப்புமின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தன.
இதே போர்ச் சூழ்நிலை காரணமாக, பல்வேறு சர்வதேச விமானங்களும் மத்திய கிழக்கு வான்பரப்பில் தரையிறங்க முடியாமல் காத்திருந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.