கொழும்பு, கம்பஹாவில் நீர் விநியோகம் திடீர் இடைநிறுத்தம் – இரசாயனக் கசிவு காரணமா?
தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமைக்கு, தனியார் தொழிற்சாலையொன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருள் காரணமாக இருக்கலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீரில் ஏதேனும் கழிவுப் பொருட்கள் கலந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் வரை, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.