பூட்டான் மன்னரை சந்தித்த பிரதமர் ஹரிணி – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு.!
பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் உள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செப்டெம்பர் 2ஆம் திகதி திம்பு நகரில் உள்ள தாஷிச்சோட்சோங்கில் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்துள்ளார்.
இதன்போது பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் இலங்கை–பூட்டான் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தக்கூடிய துறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பூட்டானின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இலங்கையின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதில் பூட்டான் கொண்டுள்ள ஆர்வத்தையும் மன்னர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் பூட்டானில் முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன், இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதால் பூட்டான் எதிர்கொள்ளும் சனத்தொகை மற்றும் தொழிலாளர் படை சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் நிலையான அபிவிருத்திக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவமும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.