தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி தீவிரம் – இன்று முதல் பல பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை
தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (06) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் கனமழையும், 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (06) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றுடனான வானிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.