இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப அமைச்சரவை அனுமதி
போர்க்காலத்தில் முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்ட இலங்கையர்களை, தேவையான அடையாளம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போர்க்காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குச் சென்று, அங்கு அகதிகளாகப் பதிவு செய்யப்பட்ட இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கை தூதரகத்தின் மூலம் அவர்களின் இலங்கையர் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, அரச புலனாய்வு சேவையிடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெறப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்கள் என உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு தற்காலிக வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, சட்ட நடவடிக்கையின்றி அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
2006 ஆகஸ்ட் 1 முதல் 2009 மே 19 வரை முறையற்ற முறையில் இந்தியாவுக்குச் சென்றவர்களுக்கும், தேவையான அடையாள மற்றும் பாதுகாப்பு அனுமதிகள் கிடைத்த பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் நாட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனினும், கொலை, அரசுக்கு எதிரான துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் நாட்டிற்குள் நுழையும் இடத்திலேயே தடுத்து வைத்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்