மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: ஏறாவூரில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் தளவாயில் மதுபோதையில் சென்ற கார், துவிச்சக்கர வண்டியில் பயணித்த 31 வயது குடும்பஸ்தர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். தப்பியோடிய சாரதி பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: ஏறாவூரில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் – புன்னக்குடா வீதியில் அமைந்துள்ள தளவாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் மது அருந்திய பின்னர் காரில் கடற்கரையை நோக்கிச் சென்றபோது, அதே வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது கார் மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் துவிச்சக்கர வண்டி முற்றிலும் சேதமடைந்ததுடன், அதில் பயணித்த நபர் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஏறாவூர் தளவாய் பகுதியைச் சேர்ந்த, ஒரு குழந்தையின் தந்தையான 31 வயது குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்திற்குப் பிறகு சாரதி வாகனத்துடன் தப்பிச் சென்றிருந்தாலும், சம்பவ இடத்தில் கிடைத்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் பொலிஸார் துரிதமாக தேடுதல் நடத்தி வாகனத்தையும் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: ஏறாவூரில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு