பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!
அரச பல்கலைக்கழக அமைப்பில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) மதிய உணவு இடைவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என FUTA எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) மதிய உணவு இடைவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான FUTA ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்திற்கு, பல்கலைக்கழக அமைப்பிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியமை, அதேவேளை மாணவர் சேர்க்கை 2015ஆம் ஆண்டில் சுமார் 25,000 ஆக இருந்த நிலையில் தற்போது சுமார் 45,000 ஆக அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக வசதிகள் அதிகரிக்கப்படவில்லை எனவும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் தொழிற்சங்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.