சம்பள உயர்வின்மையால் அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – தொழிற்சங்கம்

உரிய சம்பள உயர்வு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் இரட்டைச் சுமையை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வின்மையால் அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – தொழிற்சங்கம்

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததன் காரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பெருமளவான அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை முறையாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 50 முதல் 70 ரூபா வரை குறைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் இரட்டைச் சுமையை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உரிய சம்பள உயர்வு வழங்கப்படாமையால் நாட்டின் முக்கியமான துறைகளில் பணியாற்றும் தொழில் வல்லுநர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாட்டில் நிலவும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன், அவர்களின் சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளதாக ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

சம்பள உயர்வின்மையால் அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் – தொழிற்சங்கம்