பல பகுதிகளில் மழை; கடற்பரப்புகளில் பலத்த காற்று எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் 3 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் சிலாபம் ,புத்தளம், மன்னார், காங்கேசன்துறை கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். இதனால் குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீட்டர் உயரம் வரை எழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இடியுடன் கூடிய மழை மற்றும் கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.