கடுவெலில் ஆடம்பர பேருந்துக்கு தீ வைப்பு – உறங்கியிருந்த ஓட்டுநர், நடத்துனர் உயிர் தப்பினர்
கடுவெல பிரதான பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கடுவெல–மாத்தறை ஆடம்பர பேருந்திற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதுடன், அதற்குள் உறங்கியிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் சக ஊழியர்களின் கூச்சலால் விழித்து வெளியேறி உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல–மாத்தறை நெடுஞ்சாலை ஆடம்பர பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்தில் இருந்த ஓட்டுநரும் நடத்துனரும் இதைக் கண்டு சத்தமிட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் அப்போது ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சக ஊழியர்களின் கூச்சலைக் கேட்டு உடனடியாக வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் கடுவெல–மாத்தறை ஆடம்பர பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல–கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் லேசான சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடுவெல பொலிஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.