யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் மீது கொடூரத் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று (28) தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சபையின் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான முறைகேடுகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் மீது கொடூரத் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நேற்று (28) பிற்பகல் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான பல்வேறு விடயங்களில் கேள்விகளை எழுப்பி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 9 மாதங்களாக செயற்குழு மற்றும் நிதிக்குழு கூட்டப்படாமல் நிதி பயன்படுத்தப்படுவது, திருச்சபை யாப்பிற்கு முரணான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகள் குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வருகை தந்த விசேட குழுவினரால் நடத்தப்பட்ட போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான நிகழ்வின் இறுதி நாளில், பேராயர் பேத்மதயாளன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் இத்தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையில், தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் போதகர் சதீஸ் டானியலின் மகன், போதகர் செபஸ்டியனை தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் திட்டமிட்டதாக இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை, சுமார் 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று நிர்வாக மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் போதகர் செபஸ்டியன் கேள்வி எழுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திருச்சபையின் பதிவு, நிதி நிர்வாகம் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் திருச்சபை மக்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை, போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவர் போதகர் மீது கொடூரத் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி