தோப்பூர் கோர விபத்து: பல்கலைக்கழக பொறியியல் மாணவரும் பிரான்ஸ் செல்ல இருந்த இளைஞனும் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம் தோப்பூர் – ஜின்னாநகர் பகுதியில் ரிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய கோர விபத்தில் மூதூர் கிளிவெட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞரும் ஆவார். சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில் இரண்டு இளம் உயிர்கள் பலியாகியுள்ளன.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவராகவும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர் ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பாக மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் இரு குடும்பங்களையும், உறவினர்களையும், ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.