இன்று மீலாதுன் நபி – நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூரும் புனித நாள்
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது. அன்பு, அமைதி, கருணை, நேர்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை நினைவுகூரும் இந்நாளில், ஏழை எளியவர்களுக்கு உதவுதல் மற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதரான நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி (ஈத்-ஏ-மீலாத்) தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது. ஹிஜ்ரி நாட்காட்டியின் ரபி உல் அவ்வல் மாதத்தில் நிலவு தென்படுவதன் அடிப்படையில் இந்நாள் தீர்மானிக்கப்படுகிறது.
வரலாற்று தகவல்களின் அடிப்படையில், நபிகள் நாயகம் கி.பி. 570ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் பிறந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர் அவரது வாழ்க்கை, போதனைகள் மற்றும் இறைநெறியை நினைவுகூரும் வகையில் மீலாதுன் நபி உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான நாளாக வளர்ச்சியடைந்தது.
இந்நாள் வெறுமனே ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, நபிகள் நாயகம் மனிதகுலத்திற்கு எடுத்துரைத்த அன்பு, அமைதி, கருணை, நேர்மை, பொறுமை மற்றும் சகோதரத்துவம் போன்ற உயரிய பண்புகளை நினைவுகூரும் நாளாகவும் கருதப்படுகிறது.
இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்லும் 23 ஆண்டுகாலப் பயணத்தில் நபிகள் நாயகம் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் எதிர்கொண்ட போதிலும், பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த வாழ்க்கை முன்மாதிரி மூலம் சமூகத்தில் உயரிய விழுமியங்களை நிலைநாட்டினார்.
இதனையொட்டி, இப்புனித நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல், பிறரிடம் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்வது மற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபடுவது முக்கியத்துவம் பெறுகின்றது.