புற்றுநோயாளிகளுக்கான ‘ஃபில்காஸ்டிம்’ ஊசி தட்டுப்பாடு – ஒரு வாரத்தில் தீர்வு
சிரிஞ்ச்களில் லேபிள் இல்லாததால் ‘ஃபில்காஸ்டிம்’ ஊசி மருந்தின் தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 18,000 ஊசிகளை வான்வழியாக இறக்குமதி செய்து, ஒரு வாரத்துக்குள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சையின் போது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான ‘ஃபில்காஸ்டிம்’ (Filgrastim) ஊசி மருந்துக்கு தற்காலிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து கடந்த ஜூலை மாதம் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துத் தொகுதியின் வெளிப்புறப் பெட்டிகளில் லேபிள்கள் இருந்தபோதிலும், உள்ளே இருந்த சிரிஞ்ச்களில் லேபிள்கள் ஒட்டப்படவில்லை. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் விதிகளின்படி லேபிள் இல்லாத மருந்துகளை விநியோகிக்க முடியாததால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.
நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் ஃபில்காஸ்டிம் ஊசிகள் தேவைப்படும் நிலையில், உடனடி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 18,000 லேபிளிடப்பட்ட ஊசிகளை வான்வழியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேபிள் இல்லாத தொகுதியை மீண்டும் சீனாவுக்கு அனுப்பி, உரிய லேபிள்களை ஒட்டி மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.