வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை விரைவில் மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், விடுவிக்கப்படும் காணிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முழுமையான சுருக்கம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட மக்களிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு முக்கியமானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதுகாப்புத் தேவைகளுக்காக அவசியமான காணிகளையும் விடுவிக்கக்கூடிய காணிகளையும் தெளிவாக அடையாளம் கண்டு இறுதித் தீர்மானம் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
மேலும், காணிகளின் தேவையை தீர்மானிக்கும் போது மக்களின் நலனை கருத்திற்கொண்டு, முடிந்தவரை அதிகபட்சமான காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். காணிகளை மீள வழங்குவதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக உற்பத்தியைப் பெறக்கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைத் தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.